தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம்..!

கர்நாடகத்தை கண்டித்து நாளை முழு அடைப்பு: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புதை கண்டித்து இன்று முழு அடைப்பு நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் நாளை (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன. வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைக்குட்பட்ட 6 ஆயிரம் சங்கங்களில் இருந்து 65 லட்சம் வணிகர்கள் இந்த கடை அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அதன் தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.

 தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகளும், 4½ லட்சம் மினிவேன்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என 11½ லட்சம் வாகனங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆம்னி பஸ்களும் பகலில் இயக்கப்படாது என்று அறிவித்து உள்ளனர்.

 தமிழகம், புதுச்சேரியில் 4 ஆயிரத்து 800 பெட்ரோல்- டீசல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என்று சில சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். ஆட்டோக்கள், தனியார் வேன்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்திரைப்பட துறையினர் அறிவித்து இருக்கிறார்கள். பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்காது என்று சங்க தலைவர் வெங்கட சுப்பு கூறியிருக்கிறார்.

நகைக்கடைகள் மூடப்படும் என்று அச்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் கடை அடைப்பு போராட்டம் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி, அமைதியான முறையில் நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர் ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்வதற்கு தயாராக ஏராளமான போலீஸ் வேன்களும், மாநகர பஸ்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் போர்வையில் கலவரத்தில் ஈடுபட்டால் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ரெயில்வே எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் ரெயில்வே போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். சென்னையில் சென்டிரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் குவிக்கப்படுவர். பயணிகளுக்கோ, ரெயில்வேக்கு சொந்தமான பொருட்களுக்கோ சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடை அடைப்பு போராட்டத்துக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு இருப்பதால் மத்திய, மாநில வேலை நிறுத்த போராட்டத்தை பொறுத்த வரையில் முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரமாக இருக்கும். போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும். சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஓடும் பஸ்களுக்கும், இதர வாகனங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும். திறந்திருக் கும் கடைகள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், செயல்படும். மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்.

வன்முறை அனுமதிக்கப்படமாட்டாது. ஓடும் ரெயில்களுக்கும் பாதுகாப்பு கொடுக் கப்படும். மாலை 6 மணிக்கு மேல் நிலைமை சீராகி விடும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments