திருச்சி நத்தஹர்வலி தர்காவில் "உரூஸ்' இரவு முழுவதும் ஊர்வலம் கோலாகலம்


 திருச்சி மாநகரில் புகழ் பெற்ற நத்தஹர்வலி தர்காவில், 1013ம் ஆண்டு "உரூஸ்' என்னும் சந்தனம் பூசும் வைபவம், நேற்றிரவு வெகு விமரிசையாக நடந்தது. கடந்த ஆயிரம் ஆண்டுக்கு முன், மகான் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர் என்பவர் திருச்சி மாநகருக்கு வந்தார். துன்பத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு, இறையருள் கொண்டு ஏராளமான நன்மை செய்தார். திருச்சி- மதுரை சாலையில் அடக்கமானார். அங்கு எழுந்த நத்தர்ஹர்வலி தர்கா, திருச்சியின் முக்கிய அடையாளமாக, மத நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்கி வருகிறது. அவரின் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் "உரூஸ்' என்னும் சந்தனம் பூசும் வைபவம் நடக்கிறது. இந்தாண்டு, 1,013வது சந்தனம் பூசும் வைபவம், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடந்த 20ம் தேதி பீர் உட்கார வைத்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் துர்பத் என்னும் சுத்தம் செய்தலும், நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை சந்தனம் பூசும் வைபவமும் நடந்தது. இரவு காந்தி மார்க்கெட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கி, நத்தஹர்வலி தர்காவை அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில், இஸ்லாமியர் மட்டுமின்றி அனைத்து மதத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இரவு முழுவதும் நடந்த வைபவத்தை கொண்டாடும் வகையில், ஏராளமான கடை அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மாநகர போலீஸார் செய்திருந்தனர். இன்றிரவு (26ம் தேதி) மின் அலங்காரத்துடன் சந்தனக்கூடு ஊர்வலமும், நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிச்சை கச்சேரியும் நடக்கிறது. நாளை (27ம் தேதி) பீர் சற்குரு எழுப்புதலும், நிறைவுநாள் கக்சேரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நத்தஹர்வலி தர்கா அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.

Post a Comment

0 Comments