பேராவூரணி: ரம்ஜான் கொண்டாடாமல் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்!

பேராவூரணி பகுதியில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வது சோகத்தை ஏற்படுத்தியபோதிலும், நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், பண்டிகை கொண்டாடுவதைத் தவிர்த்துவிட்டு கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் இளைஞர்கள்
கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் இளைஞர்கள்.

இஸ்லாமியர்கள், நேற்று பெருநாள் என சொல்லப்படுகிற ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினர். பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி, ரம்ஜான் பண்டிகையைக் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பேராவூரணி பகுதியில் பண்டிகையைத் தவிர்த்துவிட்டு, கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு பேரின் உடலை அடக்கம் செய்துள்ளனர் இஸ்லாமிய இளைஞர்கள். இஸ்லாமிய இளைஞர்கள் ஆறு பேர் இணைந்து உன்னதமிக்க இந்தப் பணியைச் செய்துள்ளனர்.

குடும்பத்தினரோடு பண்டிகையைக் கொண்டாட வேண்டிய நாளில் சுடுகாட்டுக்கு வந்து கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்கைச் செய்ததைப் பலரும் பாராட்டிவருகின்றனர். இது குறித்து அந்த இளைஞர்களில் ஒருவரான பாவா என்பவர் கூறுகையில்,``பேராவூரணி பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இறந்தவர்களின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களான நாங்கள் அடக்கம் செய்யும் பணியைச் செய்துவருகிறோம். இதை நான் மற்றும் மாவட்டப் பொருளாளர் அஷ்ரஃப் அலி, ஷேக் அப்துல்லாஹ், நூர்தீன், சம்பைப்பட்டினம் பரக்கத்அலி, மல்லிப்பட்டினம் அப்துல்லாஹ் உள்ளிட்ட ஆறு பேரும் இணைந்து செய்துவருகிறோம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் உறவினர்கள் மற்றும் அருகே வசிப்பவர்களிடையே தயக்கம் நிலவிவருகிறது. அவர்கள் எங்களுக்குத் தகவல் தந்தால் நாங்கள் அனைத்தையும் செய்து தருகிறோம். இந்தப் பகுதியில் உயிரிழந்த டாக்டர் ஒருவரின் உடல் உட்பட நான்கு பேரின் உடலை அடக்கம் செய்திருக்கிறோம். இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகையான நேற்று இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர்.

அவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகை தினத்தில் கூப்பிடுகிறோமே என்ற தயக்கம் அவர்களிடம் இருந்தது. `நாங்க வந்து செய்து தருகிறோம்’ எனத் தகவல் கூறிவிட்டு, ரமலான் பண்டிகைக்கான தொழுகையை அவசர அவசரமாக முடித்துவிட்டு, உடலை அடக்கம் செய்யக் கிளம்பினோம்.

சுடுகாட்டில்
                                                        சுடுகாட்டில்

எங்கள் வீட்டில், ``பெருநாளான இன்னிக்கும் போய் உதவி செய்யணுமா’’ன்னு கேட்டாங்க ``நம்மைக் கூப்பிட்ட பிறகு நாம் போய் செய்யாம இருக்கக் கூடாது. அது மனித நேயம் கிடையாது" எனச் சொல்லிப் புரியவைத்துவிட்டு வந்து உடலை அடக்கம் செய்தோம். இதற்காகக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. மக்களுக்கு சேவை செய்ய, இறைவன் எங்களுக்கு அளித்த வாய்ப்பாக இதைக் கருதுவதுடன் மனித நேயத்தை வளர்க்கவும் இது பயன்படும் என்பதால், சிரமமாகப் பார்க்காமல் செய்துவருகிறோம்’’ என்றார்.

Post a Comment

0 Comments