வேண்டாம் ஏப்ரல் ஃபூல்..!

ஏப்ரல் மாதம் முதல் நாள் முட்டாள்களின் தினம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முட்டாள்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். அறிவுடன் நடக்கக் கடமைப்பட்ட முஸ்லிம்களுக்கு ஏற்றதாகாது.
ஏப்ரல் ஃபூல் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் காரியங்கள் ஏராளமான பாவங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. அல்லாஹ்வின் ஏராளமான கட்டளைகள் மீறப்படுகின்றன.
பிறர் மீது மையைத் தெளித்து அசிங்கப்படுத்துவதை எடுத்துக் கொள்வோம். இது இந்துக்களின் ஹோலிப் பண்டிகையின் மறுவடிவமாக உள்ளது.
யார் பிற சமுதாயத்தின் கலாச்சாரத்துக்கு ஒப்ப நடக்கிறானோ அவனும் அவர்களைச் சேர்ந்தவனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நூல்: அபூதாவூத் 3512
அன்றைய தினம் பொய்யை மெய்போல் காட்டி மற்றவரை ஏமாற்றுகிறார்கள்.
பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6094

ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.
(நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)
ஏப்ரல் ஃபூல் என்ற பெயரில் பிறரைக் கேலி செய்கின்றனர்.
இதுவும் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட காரியமே.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர் ஆன் 49:11
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான்.
(நூல்: புகாரி 10, 6484)
எனவே ஏப்ரல் ஃபூல் என்ற பெயரில் நம்மை நாமே பாவிகளாக்கிக் கொள்வதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

Post a Comment

0 Comments