வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரில் வந்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலை தான் இருந்து வருகிறது. இதனால் பலரும் வாக்களிக்க இயலாமல் போக நேரிடுகிறது.

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி செய்து தரவேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் ஒரு கோடி பேர் தபால் மூலம் வாக்களிக்க இயலும். தேர்தல் கமிஷன் பரிந்துரையின் படி இ-பேலட் வாக்குப்பதிவு முறையை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான சட்டம் பிறப்பிக்கப்பட்டதும், இ-பேலட் மூலம் வாக்களிப்பதற்கான நடைமுறைகள் துவங்கப்படும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. எனினும் விரைவாக இவ்வசதியை செய்து தரவேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் 8 வார காலத்திற்குள் இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டது.
இம்முறைப்படி வெளிநாடு வாழ் இந்தியருக்கு இ-மெயில் மூலம் வாக்குச்சீட்டு அனுப்பப்படும். தனக்கு விருப்பமான நபருக்கு வாக்களித்த பின் வாக்குச்சீட்டை தபால் மூலம் தனது தொகுதி தேர்தல் அதிகாரிக்கு வெளிநாடு வாழ் இந்தியர் அனுப்பவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments