ஆஷூரா நாள் அருள் நிறைந்த திருநாள்...!

முஹர்ரம் மாதத்தின் முதல் நாளிலிருந்து எண்ணி வரும் பத்தாம் நாளே ஆஷூராவுடைய நாள் என்று அழைக்கப்படுகிறது.

அரபுகளுக்கு முன்னர் சிறப்போடு வாழ்ந்த யூதர்கள் தங்கள் ஆண்டின் துவக்க மாதத்தை “திஷ்ரீ” என்றழைத்தனர். ஹழ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்களின் வழிவந்தவர்களான அவ்விரு சமுதாயத்தவர்களுடையவும் காலக் கணிப்பில் மாதங்களின் பெயர்கள் வெவ்வேறாக இருந்த போதிலும் அவற்றின் துவக்கமும் முடிவும் ஒன்றாகவே வருவன. அவ்வகையில் அரபிகளின் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் வந்த அன்றே யூதர்கள் “திஷ்ரீ” மாதத்தின் பத்தாம் நாளும் வந்து கொண்டிருந்தது. எனவேதான் அது பத்தாம் நாள் என்ற பொருள்பட யவ்முல் ஆஷூரா என அழைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அல்லாஹ் அந்தக் குறிப்பிட்ட நாளிலேயே அடுத்தடுத்து தன் பத்து கற்பனைகளை வெளிப்படுத்தியதால் அது ஆஷூரா நாள் எனப் பெயர் பெற்றதாகவே மெய் நிலை கண்டஞானி முஹியத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மாநபியின் திருப்பேரர்(ரஹ்) அவர்கள் தங்களின் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்கள்.

1. ஆதம்(அலை) அவர்களின் பச்சாதாபம் அந்த நாளில்தான் ஏற்பட்டது.

2. இத்ரீஸ்(அலை) அவர்களுக்கு அன்றே சுவனப் பெருவாழ்வு கிடைத்தது.

3. ஆறுமாத காலம் பிரளயத்தில் அலைக்கழிந்த பின்னர் ஹழ்ரத் நூஹ்(அலை) அவர்களின் மரக்கலம் ஜூதி மலையில் அன்றைய தினமே ஒதுங்கி நின்றது.

4. இப்ராஹீம்(அலை) அவர்கள் பிறந்ததும், அல்லாஹ் அவர்களைத் தன் கலீலாக—தோழராக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்புக் குண்டம் அவர்களுக்கு சுவனப் பூங்கவாக மலர்ந்ததும் அன்றேயாகும்

5. தாவூத்(அலை) அவர்களின் பிழை பொறுக்கப்பட்டதும் அந்த நாளிலேயேயாகும்.

6. ஸுலைமான்(அலை) அவர்கள் இழந்த தம் ஆட்சியை அன்றைய தினமே மீண்டும் அடையப் பெற்றார்கள்.

7. சோதனை வயப்பட்ட அய்யூப்(அலை)அவர்கள், பிணிகளனைத்தும் நீங்கி நலம் பெற்றதும் அன்றேயாகும்.

8. நைல் நதி பிளந்து பனீ இஸ்ராயீல்கள் தப்பிச் செல்ல வழிவிட்டு ஃபிர் அவ்னைத் தன்னுள் விழுங்க, அல்லாஹ் ஹழ்ரத் மூஸா(அலை)அவ்ரகளுக்கு ஆஷூராவுடைய அந்த நாளிலேயே வெற்றியைத் தந்தான்.

9. கடலில் ஆழத்தில்-கடும் இருட்டில் –மீனின் வயிற்றில் நாற்பது நாட்கள் கிடந்து அழுது புலம்பி ஹழ்ரத் யூனுஸ்(அலை) மீண்டும் வெளியானதும் ஆஷூராவுடைய நாளிலேயேயாகும்.

10. கொலையாளிடமிருந்து ஹழ்ரத் ஈஸா(அலை) அவர்களைக் காத்து அல்லாஹ் தன் பால் உயர்த்திக் கொண்டதும் ஆஷூராவுடைய நாளிலேயே.

மேற்கண்ட பத்து காரணங்களால் புனிதம் பெற்ற ஆஷூராவுடைய நாள் இஸ்லாத்துக்கு முந்திய அரபுகளால் மட்டுமின்றி யூதர்களாலும் கண்ணியப்படுத்தப்பட்டே வந்தது.

பிறளயத்துக்குப் பின் கப்பல் நலமாக ஜூதி மலையில் தரை தட்டியபோது தங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த ஹழ்ரத் நூஹ்(அலை) அவர்ளும் அவர்களோடு கப்பலில் இருந்த அனைவரும்- பறவைகளு் கால் நடைகளும் கூட நோன்பிருந்தன என்று அல்லாமா ஸாவீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

Post a Comment

0 Comments