சிங்கப்பூரின் சிகிச்சை பலனில்லாமல் போகலாம்;சவூதி அரசின் தீர்ப்பு பலனில்லாமல் போகாது

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் சென்ற 20.12.2012 வியாழன் அன்று நிறைவு பெற்றது. கூச்சல், குழப்பம் என்று அவ்வப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக சில மணி நேரங்கள் முடக்கப்பட்டாலும் கேள்வி நேரம், முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேறுதல், சட்ட திருத்த முன்வரவின் மீது விவாதங்கள் என ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் இருந்தன.

டிசம்பர் & 6 என்றாலே அக்கிரமக்காரர்களின் அராஜக வெறியாட்டத்தால் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வுதான் நம் கண்முன்னே நிழலாடும்; கல்புகள் கனக்கும். அது நமது நாட்டின் கருப்பு நாள். அன்றைய தினம் நாடாளுமன்றம் தொடங்கியவுடனேயே நான் எழுந்து சபாநாயகர் மாடத்தில் இருந்த மேடத்தை நோக்கி ‘‘பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் இருந்தவர்களை குற்றவாளிகள் என்று லிபரான் கமிஷன் அறிவித்ததே அந்த குற்றவாளிகள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?’’ என்று உரத்த குரல் எழுப்பினேன்; இல்லை இல்லை; என்னையும் அறியாமல் முதன்முறையாக அலறி கத்தினேன்; பல உறுப்பினர்கள் எனது குரலுக்கு ஆதரவுக்கரம் நீட்ட ‘‘அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்’’ என்ற பிடிவாதத்தில் மன்றத்தின் மையப்பகுதிக்கே சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நின்று உரக்கக் குரல் எழுப்பினேன். அண்ணன் டி.ஆர். பாலு அவர்களும், தி.மு.க.வின் மற்ற உறுப்பினர்களும் என் குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் மையப்பகுதிக்கே வந்து என்னுடன் கைகோர்த்தார்கள். வேறு வழியில்லாமல் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டது. அன்றைய தினம் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என்று மீடியாகள் ‘முஸ்லிம் லீக் எம்.பி., எம்.அப்துல் ரஹ்மான் முற்றுகை’ என்றே செய்திகள் வெளியிட்டன.
இந்தக் கூட்டத் தொடர் முடிவு பெற நான்கு நாட்களே உள்ளன என்ற நிலையில் டில்லி நகரை பெரும் பரபரப்புக்குள் ஆழ்த்திய நிகழ்வாக 23 வயதுடைய ஒரு கல்லூரிப் பெண் பாலியப் பலாத்காரத்துக்கு ஆளான கொடுமை விஸ்வரூபம் எடுத்தது. 16.12.2012 & டில்லி நகரில் மாலை நேரம்; மருத்துவக் கல்லூரியில் பிஸியோதெரபி பயிலும் ஒரு மாணவி தன் சகவகுப்பு மாணவனுடன் வீடு திரும்ப பேருந்துக்காகக் காத்து நிற்க, அதற்கேற்றாற்போல் ஒரு பேருந்து வந்து நிற்க இருவரும் அதில் ஏறியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் உள்ளே இருந்த ஆறு கயவர்கள் அந்த மாணவரிடம் வம்பு இழுத்து அவரை அடித்துப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணையும் பலாத்காரமாய் ஓடும் பஸ்ஸிலேயே கற்பழித்திருக்கின்றனர். ஒரு பெண் ஆறு ஆண்களோடு போராடுவது; மல்லுக்கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. வெறிகொண்ட அந்த மனித மிருகங்களின் இந்த அருவருப்பான செயலைக் கடுமையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், டில்லி பிரதேச முதலமைச்சர் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், பொது நல அமைப்புகளின் நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சையில் இருந்த அந்த மாணவியைக் கண்டு வந்தனர்; அவரின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லினர். நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் கண்டனக் குரல்களும் பதிவாகின.

டில்லி மாநகரில் எங்கு நோக்கினும் மாணவர்களின் கண்டனக் கூட்டங்கள், அனுதாப ஊர்வலங்கள்; இன்னும் வெறுப்பும் கோபமும் கலந்த தங்களின் உணர்வை வெளிப்படுத்த டில்லி முதலமைச்சர் திருமதி. ஷீலா தீட்சித், பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோரின் இல்லங்களின் முன்கூடி ‘இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முழக்கம் எழுப்பினர். ஆங்காங்கே கூடிய கூட்டங்களைக் கட்டுப்படுத்த டில்லி போலீஸார் திணறினர்; தண்ணீர்ப் பீய்ச்சியும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும்தான் கூட்டங்களைக் களைத்திட முடியும் என்கிற அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

கற்பழிக்கப்பட்ட அந்த மாணவி பேருந்திலிருந்து உதைத்து வெளியே தள்ளப்பட்டதால் ஏற்பட்ட உள் காயங்களும் சேர்ந்து அதிகமான பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. உயிருக்குப் போராடும் அளவுக்கு நிலை மிக, மிக மோசமாகிய இந்தப் பெண்ணை சிங்கப்பூருக்கு எடுத்துச் சென்று பிரபல்யமான மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்தது இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய அபாயகரமான நிலையில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய அவசரமும் அவசியமும் என்ன? என்பது யாருக்கும் புரியாத புதிர். எப்படியோ, உயிருக்காகப் போராடும் இந்த இளம்பெண் நலம் பெற்று நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் விருப்பமுமாக இருந்தது.

இதற்கிடையில் இந்த பாலியல் கொடுமையால் மிகுந்த அழுத்தத்திற்கும், பரவலான போராட்டங்களுக்கும் ஆளாகிய மத்திய அரசு உடனடியாக முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான மூவர் குழு விசாரணையை அறிவித்து முடுக்கிவிட்டிருக்கிறது. பாராட்டலாம்; என்றாலும் இத்தகைய பலாத்கார பாலியல் குற்றங்கள் இந்தியா முழுவதும் பரவலாக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக இருப்பதை யாரும் மறுத்திட முடியாது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி 2011 ஆம் ஆண்டு இறுதியில் பாலியல்பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 95,065. இதில் 79476 வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே உள்ளன. பாலியல் அத்துமீறல் (விஷீறீமீstணீtவீஷீஸீ) வழக்குகள் 1,92,160 இதில் 1,62,777 வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே உள்ளனவாம். இன்னும் ஒவ்வொரு ஆண்டும் பதியப்படுகிற வழக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம் கொள்வது என்றே புரியவில்லை. பதியப்பட்ட வழக்குகள் இத்தனை என்றால் வழக்குகள் பதியப்படாமலேயே பாதிப்படைந்த பெற்றோரும், வெளியில் சொன்னால் மானக்கேடு என நினைத்து மனக்குமுறலோடு வாழ்கிற பெண்களும், வாழ விருப்பமில்லாமல் மனமுடைந்து உயிரை இழந்த பெண்களும் நாட்டில் எத்தனையோ! நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கிறது.

இந்த டில்லி நிகழ்ச்சிக்குப் பிறகுதான் பாலியல் வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டத்துறைக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது. பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், பாலியல் வன்முறை, மிரட்டல், வல்லுறவு போன்ற வழக்குகள் விரைந்து முடிக்கப்படாமல் பல ஆண்டுகள் தள்ளிப்போடப்படுவதற்கு நீதிமன்றங்கள் மாத்திரமே காரணமல்ல. ஜனநாயகம் என்கிற உரிமையை அழுக்கு சாக்காகப் பயன்படுத்தி வாய்தா வாங்குகிற வக்கீல்களும் காரணம் என்றால் யாரால் மறுத்திட முடியும்? இத்தகைய அக்கிரமங்களை எதிர்த்து வருகிற வழக்குகளுக்கு வாய்தா வாங்கி, வாங்கி காலத்தைத் தள்ளிக் கொண்டு போகிற வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அரசின் சட்டத்துறைக்கு உள்ளது என்பதை இந்த நேரத்திலாவது உணர வேண்டியது கட்டாயம்.

மேலும் இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகக் கூற முடியாமலும் இருக்கிற நீதிமன்ற நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும். இத்தகைய வழக்குகளை விசாரிக்கிற நீதிபதிகள் பெண் நீதிபதிகளாக இருக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்களை விசாரிகிற வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும். ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும்; அக்கிரமத்தையும், அவமதிப்பையும், பாலியல் கொடுமையையும் கூச்சமில்லாமல் அப்படியே சொல்ல வேண்டுமானாலும், ஒரு பெண்ணிடம்தான் சொல்ல முடியும். இது யதார்த்தம். இதில் ஆண்கள் எந்த ரூபத்தில் நுழைந்தாலும் நீதிபதியாகவோ, வக்கீலாகவோ, விசாரணை செய்யும் காவல் துறையினராகவோ இருந்ததலும் சரி; வழக்கு நியாயமானதாகவும், நீதியை நிலைநாட்டுவதாகவும் இருந்திட இயலாது. ஒரு ஆண், வழக்கறிஞர் நினைத்தால் வக்கிரம் பொதிந்த கேள்விகளைக் கேட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை நிலைகுலையச் செய்திடவும் முடியும். இதையும் தாண்டி இந்த பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கிற வகையில் பிரத்தியேகமான விரைவு நீதிமன்றங்கள் அமைத்திடல் வேண்டும்.

அடுத்து இத்தகைய பாலியல் கொடுமைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று இப்போது பலரும் பரவலாகச் சொல்வதைக் கேட்கிறோம். இஸ்லாம் வகுத்துத் தந்த வாழ்வியலில் கற்பழிப்புக்குத் தண்டனை வழங்குவதில் சமரசத்திற்கே இடமில்லை. மரணதண்டனைதான் ஒரே தீர்ப்பு. இந்தத் தண்டனையை ஓரிருமுறை நடத்திவிட்டாலே போதும். நாடெங்கிலும் இக்குற்றங்கள் வெகுவாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் இல்லாமலேயே ஆகிவிடும். மனிதகுல நல்வாழ்வுக்கு நிரந்த தீர்ப்பு எது? என்பதை இஸ்லாம் எல்லா தளங்களிலும் தெளிவாகக் காட்டுகிறது. அந்த வகையில் பாலியல் குற்றங்களுக்கான சரியான தீர்வாக மரண தண்டனை மாத்திரமே இருக்க முடியும் என்கிற குரல் இப்போது நாடெங்கிலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதை எழுதிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் (29.12.2012) அதிகாலை டில்லி கற்பழிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 23 வயது இளம் பெண் தனது உயிருக்குப் போராடிய நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சிங்கப்பூரில் இறந்துவிட்டாள் என்ற தகவல் வந்திருக்கிறது. ‘‘வீரம் செறிந்த இந்திய நாட்டுக் குடிமகள் மாண்டாள்’’ என்று வேதனையுடன் நாடே சோகத்தில் மூழ்கியிருப்பதை தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. வெட்கித் தலைகுனிகிறோம்! என்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

‘சிறப்பான சிகிச்சை வேண்டும்’’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். பலன் இல்லை.

சிறப்பான தீர்ப்பு வேண்டும்’ என்று பாதிக்க வைத்த கொடியவர்களை சவூதிக்கு அனுப்புங்கள்; பலன் இருக்கும்’’ என்கிறார்கள் நீதி கேட்கும் நியாய உள்ளங்கள். இன்ஷா அல்லாஹ் Editor M.Abdul Rahman MA.MP.,

Post a Comment

9 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........