நோன்பு பெருநாள் சம்மந்தமான விளக்கம்..!

*வயது வித்தியாசமின்றி அனைத்து முஸ்லிம்களின் மீதும் ஸகாதுல் பித்ர் கடமையாகும்*
“முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு (மக்களின் அப்போதைய உணவுப் பொருட்களான) பேரீச்சம் பழம் அல்லது தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி ﷺ அவர்கள்
கடமையாக்கினார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503

*பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கக் கூடாது*
“அல்லாஹ்வின் தூதர்
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 2098

*நோன்பை முறித்தவர்களுக்கான பரிகாரங்கள்*
நாங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒருவர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?‘ என்று கேட்டார்கள். ‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி (என் நோன்பை முறித்து) விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் ﷺ அவர்கள், ‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?‘ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!” என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?‘ என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இல்லை!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?‘ என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், ‘இல்லை!” என்றார். நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ‘கேள்வி கேட்டவர் எங்கே” என்றார்கள். ‘நானே!” என்று அவர் கூறினார். ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!‘ என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? அல்லாஹ்வின் மீதாணையாக! மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு ‘இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1936

*பெருநாள் தொழுகை முறை*
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். அ(ந்தந்த ரக்அத்களில் அவ்வெண்ணிக்கையிலான தக்பீர்களைக் கூறிய)தற்கு பிறகு (தான் அந்தந்த ரக்அத்களுக்கான) கிராஅத் ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1151
*பெருநாள் தொழுகைக்கு செல்லும் பாதைகளை மாற்றுதல்*
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும். பெருநாள் வந்து விட்டால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986

*தொழுகைக்கு முன் சாப்பிடுதல்*
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபிகள் நாயகம் ﷺ அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426

*முன் பின் சுன்னத்துகள் இல்லை*
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616

*பாங்கு இகாமத் இல்லை*
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபிகள் நாயகம் ﷺ அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610

Post a Comment

0 Comments