திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில், அதிகாலை 1.30 மணிக்கு ஏற்ப்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் பலியானார்கள்.

வியாழக்கிழமை இரவு டிஎன்.34 ஆர்.0652 எண்ணுடைய பால் டேங்கர் லாரி முசிறியிலிருந்து 15 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு, கேரளாவில் உள்ள தனியார் பால் பண்ணைக¢கு செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டியிருந்தது. அப்போது கொடைக்கானலிலிருந்து ஒரு குவாலிஸ் காரில் பத்து பேர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டிக்கு சென்றனர்.
இவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு மெயின் ரோடு சேடபட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. பால் டேங்கர் லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குவாலிஸ் காரில் சென்ற கார் டிரைவர் மோகன் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
இந்த விபத்தில் கார் முன்பகுதியில் டிரைவர் மோகன் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் ஒரு கை இல்லாமல் மீட்டனர். மேலும் பலருக்கு கால், கை துண்டாது. தலையில் பலத்த காயமடைந்து உடல் சிதறி பலியானார்கள்.
பலியானவர்களின் உடல்கள் மற்றும் சதைகள், மூளைகள் சிதறி கிடந்தது. தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ செல்வராஜ் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிப்பட்டியில் உள்ள அரபி கல்லூரியில் படிக்கும் இவர்கள், கொடைக்காணலில் உள்ள ஒரு புது வீட்டில் பாத்தியா தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

பள்ளிப்பட்டி அருகே உள்ள அரவாக்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் மோகன். இவருக்கு சொந்தமான வாடகைக் காரில் 9 பேரும் சென்றுள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் மோகன், தமிம் அன்சாரி அலி (25), அபிசாலி (25), சையது இப்ராகிம் (25), அப்துல் ரகுமான் (35), ஹலிவுல்லா (25), பசீர்வுல்லா (35) ( இருவரும் அண்ணன், தம்பிகள்), அப்துல் ரகீம் (கடலூர் மாவட்டம் இறையூரைச் சேர்ந்தவர்), அலிபா ஆகியோர் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த கலில் ரகுமான் (46) படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்தால், 1.30 மணி முதல் 3.30 மணி வரை இரண்டு மணி நேரம் செம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் சம்பவம் நடந்தவுடன் அந்த இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவத்தை அறிந்த பள்ளப்பட்டியில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
சக்தி
நன்றி:நக்கீரன்



Post a Comment

0 Comments