ஏப்ரல் 3ம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறப்பு - அரசு அறிவிப்பு

சென்னை: ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்கள் காரணமாக மூடப்பட்ட பொறியியல் கல்லூரிகளை ஏப்ரல் 3ம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும், தனி ஈழம் அமைக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் திடீரென சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இது படிப்படியாக மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவர்கள், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு மாணவர்களோ அல்லது பொதுமக்களோ பாதிக்கப்படக்கூடாது என்று கருதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. மார்ச் 18-ந்தேதி அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டன. விடுதிகளும் மூடப்பட்டன. தற்போது கல்லூரிகளை மூடி 2 வாரமகிறது. பாடம் நடத்தி முடிக்கப்படவில்லை. செமஸ்டர் தேர்வுகளையும் நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதனால் கல்லூரிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளை மட்டும் ஏப்ரல் 3ம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments