எங்க அப்பா உடலே வேண்டாம்... நீங்களே வச்சிக்கோங்க..! வசூல் ஆஸ்பத்திரிக்கு பெண் சூடு..

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 3 லட்சம் ரூபாய் கட்டணத்திற்காக கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை கொடுக்க மறுத்த தனியார் மருத்துவமனையிடம், தந்தையின் சடலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பெண் ஒருவர் கூறிச்சென்றதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கும் நிலைக்கு மருத்துவமனை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே குன்னம் பாறை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ராமசாமிக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் மார்த்தாண்டம் பி பி கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மனைவி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ராமசாமிக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமசாமி உயிரிழந்தார். உடலை பெற்று கொள்ள சென்ற உறவினர்களுக்கு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனை கட்டணமாக தற்போது வரை ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தபட்ட நிலையில் மேலும் 3 லட்சம் ரூபாய் கட்டினால் தான் சடலத்தை தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக கூறப்படுகின்றது.

 இதைக் கேட்ட ராமசாமியின் மகள் ஜாஸ்மின் சுபதா, அவ்வளவு பணம் இல்லையென்றும், தந்தையின் சடலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பிபிகே மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த சடலத்தை மருத்துவமனையிலேயே வைக்கவும் முடியாமல் விழிபிதுங்கிப் போயினர்.

இது குறித்து விவரித்த ராமசாமியின் மகள் ஜாஸ்மின் சுபதா, தனது தாயாருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சிகிச்சைக் கட்டணம் செலுத்திய நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அதே போல் தந்தை ராமசாமிக்கு சிகிச்சை கட்டணம் மற்றும் மருந்து கட்டணம் என ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும், தற்போது தந்தை உயிரிழந்த நிலையில், சிகிச்சை உள்ளிட்ட செலவுகள் குறித்து தங்களிடம் தரப்பட்ட ரசீதில் தேவையற்ற பல செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே அறையில் தனது தந்தையையும் தாயையும் தங்கியிருக்க வைத்து சிகிச்சை அளித்து விட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தலா இரண்டாயிரம் ரூபாய் தினசரி அரை வாடகையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மொத்தம் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என தங்கள் மீது அதிக கட்டணத்தை திணித்ததால், அந்த தொகையை செலுத்த முடியாது எனவும், அதுவரை தனது சடலத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் போது எப்படியேனும் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நோயாளிகள் கூறுவதாகவும் சிகிச்சை அளித்த பின்பு தங்களுக்கான கட்டணம் அதிக அளவில் விதிக்கப்பட்டுள்ளதாக குறை கூறுவதும் தற்போது வாடிக்கையாக மாறிவிட்டது என தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நியாயமான கட்டணத்தை விதித்த பின்னரும் அதை செலுத்த மறுத்து உடலை பெற்றுக் கொள்ளாமல் சென்றது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளதோடு ராமசாமியின் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்துக்கொண்டு பேரம் பேசிய வசூல் ஆஸ்பத்திரிக்கு அதே சடலத்தால் கடிவாளம் போடப்பட்ட சம்பவம், தமிழகத்தில் உள்ள மற்ற வசூல் ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு எச்சரிக்கை பாடம்.

Post a Comment

0 Comments