“புதுவையில் ஏன் தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது?” -உயர்நீதிமன்றம் கேள்வி!

புதுச்சேரியில் ஏப்ரல் 6ல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற கூடிய நிலையில், பாஜக மீது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை ஏன் தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

புதுவையில் எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாஜகவினர் வாக்காளர்களின் கைப்பேசி எண்களை பெற்று, வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்காளர் பட்டியலில், பெயர் மற்றும் முகவரி மட்டுமே இருக்கும் நிலையில், ஆதர் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் எண்களை பெற்று டிஜிட்டல் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்னிலையில்
விசாரணைக்கு வந்தநிலையில், புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
மேலும், இந்த குற்றச்சாட்டை உடனடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும்,
குழு குறுஞ்செய்தி மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக அனுமதி பெறாத நிலையில், அக்கட்சிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments