வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதினெட்டு வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும், விடுபட்டோர் தங்கள் பெயரை பட்டியலில் இணைத்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்யவும் எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இதோ...  

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

மண்டல அலுவலகத்திலும், சிறப்பு முகாம் நடக்கும் நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இலவசமாக படிவம் - 6 கிடைக்கும். 18 வயதிற்கு மேற்பட்டோர் இந்த படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, ஒரு புகைப்படம் ஒட்டி, மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலரிடமோ, சிறப்பு முகாம்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடமோ வழங்க வேண்டும்.

உரிய கள ஆய்வுக்கு பின், இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

தங்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை, சம்பந்தப்பட்ட வாக்காளர் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள தேதியில், ஓட்டுச்சாவடியில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம். 
வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்:

வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம்.

1. முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.

2. பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.

3. அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.

4. ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

பெயர், முகவரி திருத்தம் செய்ய...!

இதற்கு 'படிவம் - 8' ஐ பூர்த்தி செய்து, பெயர் அல்லது முகவரியில் என்ன திருத்தம் செய்ய வேண்டுமோ, அதற்கான உரிய ஆவணங்களை இணைத்து தர வேண்டும். ஒரே தொகுதியில் ஒரு முகவரியில் இருந்து வேறு முகவரிக்கு இடம் மாறு தலாகும் வாக்காளர், அதற்கு 'படிவம் - 8 ஏ'வை பூர்த்தி செய்து, புதிய முகவரிக்கான ஆவணத்தை இணைத்து தர வேண்டும்.

தொலைந்த வாக்காளர் அடையாள அட்டை பெற...!

வாக்காளர் அட்டை வைத்திருந்து தொலைத்தோர், மண்டல அலுவலகங்களில் சென்று, 'படிவம் - 001 ஏ' வை பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதற்கான ஆவணத்தையும், 25 ரூபாய் பணமும் செலுத்தினால், 15 தினங்களில், புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும்.

பெயர் நீக்க செய்ய வேண்டியது என்ன?

ஒரு தொகுதியை விட்டு, வேறு தொகுதிக்கு முகவரி மாற்ற மாகும் வாக்காளர், 'படிவம் - 7' ஐ நிரப்பி தர வேண்டும்.

அதனுடன் புதிதாக மாற்றலாகி செல்லும் முகவரிக்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

வாக்காளர் பழைய தொகுதியில் தங்கள் பெயரை நீக்க விண்ணப்பிக்க முன்வராத பட்சத்தில், அரசியல் கட்சியினர், வீட்டு உரிமையாளர் போன்ற விவரம் அறிந்தோர், படிவம் 7ஐ பூர்த்தி செய்து, மண்டல அலுவலகம் மற்றும் ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் அளிக்கலாம்.

உரிய கள விசாரணைக்கு பின், பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது ?

http://eci-citizenservices.nic.in/default.aspx இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

http://www.elections.tn.gov.in/eregistration/ இத்தளத்திலும் உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை http://elections.tn.gov.in/apptrack/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

http://www.elections.tn.gov.in/contacts/ இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்புஎண்ணைத் தெரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/ இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய elections.tn.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும். 

Post a Comment

0 Comments