வழுத்தூர் M.A.G. அக்பர் அலி..!

சமுதாய ஆர்வலர் ஹாஜி.M.J.அப்துல் ரவூப் அவர்கள் எழுதிய கட்டுரை

M.A.G. அக்பர் அலி என்பவர் யார்? 30 வருடங்களுக்கு முன்பு உள்ள இளைஞர்களுக்கு தெரியும். படிப்பில், பொது அறிவில், பொது நல சேவையில், விளையாட்டில், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்தான் என்பதை வழுத்தூர் மக்கள் உணர்வர். 

தற்போது மலேசியாவில் சுற்றுப்புற சூழல் ஆலோசகராக (Environment Consultant) பணிபுரிகிறார். தற்போது 60 வயதுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இன்றும் இளைஞராக ஜொலிப்பவர்.

சென்னை பல்கலைகழகத்தில் B.Sc. படித்துவிட்டு மலேசியா பல்கலைகழகத்தில் சுற்று சூழல் துறையில் M.Tech. மாஸ்டர் டிக்ரி பெற்றுள்ளார். மனிதர்கள் சுற்று சூழலில் எப்படி எல்லாம் வைரஸ் கிருமிகள் தாக்குதலில் இருந்து விடுவித்து வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். மேலும் சுற்று சூழல் துறையில் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்து முடிக்கும் தருவாயில் உள்ளார்.

சுமார் 400க்கும் மேற்பட்ட சுற்று சூழல் மற்றும் சயின்ஸ் நூற்களை சிறுவர்களுக்காக எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதனை படைத்தவர் என்பது மலேசியா ரிக்கார்டு. மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு சுற்று சூழல் குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்து மக்களை மனதளவில், வியாபார அளவில் சிறப்படைய பயிற்சி அளித்து வருகிறார்.

1980 களில் அக்பர் அலி அவர்கள் வழுத்தூருக்காக செய்த சேவைகள் பல என்பது அனைவரும் அறிந்ததே. வழுத்தூர் பொது நல சங்கத்தை நிறுவ காரணமானவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். இவரின் ஆங்கில புலமை, இவர் எழுதும் ஆங்கில கடித தொடர்பு கலக்டர்களையும், அமைச்சர்களையும் கவர்ந்து அதன் மூலம் நமக்கு சாதகமான காரியங்கள் வெற்றிபெற உறுதுணையாக இருந்தது.

மாலை நேரங்களில் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுத்து ஆங்கிலத்தில் எப்படி புதுமையாக பேசவேண்டும், எழுதவேண்டும் என்று சிறப்பு பயிற்சி அளித்து மாணவர்களையும் இளைஞர்களையும் ஊக்கப்படுத்துவார். இவரிடம் ஆங்கில பயிற்சி எடுத்ததின் மூலம் எனது தம்பி பொறியாளர் M.J.முகம்மது இக்பால் S.S.L.C. பொது தேர்வில் ஆங்கிலத்தில் 94% மார்க் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனது தம்பி இக்பாலின் ஆங்கில புலமைக்கு இவருடைய பயிற்சியும் காரணமாகும் என்று பெருமையுடன் கூறுவேன்.

அக்பர் அலி வர்கள் அடக்கமானவர், அதிகம் பேசமாட்டார், அதே சமயம் நண்பர்களிடத்தில் சிரித்த முகத்துடன் கலகலப்பாக உற்சாகத்துடன் இருப்பார். விவேகமானவர், சமுதாயத்திற்காக நன்மை செய்ய தூண்டுபவர். என்னைப்போன்ற சமுதாய நல ஆர்வலர்களுக்கு இன்றுவரை அக்கறை கொண்ட ஆலோசகராக இருந்து வருபவர் என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன்.

எப்போதும் பொதுநலத்தில் அக்கறையுடன் செயல்படுபவர். தற்போது சுற்று சூழல் நல துறையில் அக்கறையுடன் உலக மக்களுக்காக செயல்பட்டு வருபவர். குயில் பாட்டை கேட்டு ரசிப்போம் ஆனால் குயிலை பார்க்க இயலாது. அதுபோல தற்போது மலேசியாவில் தொழில் காரணமாக குடும்பத்துடன் இருந்து வந்தாலும் விரைவில் வழுத்தூரான சொந்த மண்ணிற்கு வந்து இவர் சேவை செய்ய வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது பலரின் ஆவலாக உள்ளது. அவரது சேவை தொடர வரவேற்ப்போம் வாழ்த்துவோம்.

Post a Comment

0 Comments