கருணை நபி (ஸல்) புகழ்க் காவியம் கஸீதத்துல் வித்ரிய்யா வெளியீடு..!

உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களின் உயர்வைப் போற்றும் நபிபுகழ் இலக்கியங்களின் வரிசையில் தமிழ்நாட்டில் உருவாகி,தரணியெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளத்தைக் கவர்ந்த ஒரேயொரு நபிபுகழ் இலக்கியம் கஸீதத்துல் வித்ரிய்யா ஆகும்.
அரபியர்களையே ஆச்சரியத்தில் மூழ்கவைக்கும் அற்புதமான இலக்கியத்தர நடையில் ஒரு தமிழ்முஸ்லிம் மெய்ஞ்ஞானியால் இயற்றப்பட்ட காவியமான கஸீதத்துல் வித்ரிய்யா என்பது .அதைக் கற்கின்றவர்களின் கருத்தைக் கவரும் கற்கண்டுப் பெட்டகமாகும்.

ஆம் ! காயல்பட்டினத்தில் பிறந்து,அதிராம்பட்டினத்தில் கல்வி பயின்று,கீழக்கரையில் மறைந்து நல்லடக்கமாகியுள்ள மகான் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்) அவர்களால் 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு தமிழ் மற்றும் மலையாள முஸ்லிம்களால் உலகெங்கும் ஓதப்பட்டுவரும் கஸீதத்துல் வித்ரிய்யா எனும் நபிபுகழ்க் காவியம்,தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமாசபையின் துணைப்பொதுச் செயலாளரும் தஞ்சை பாபநாசம் ஆர்.டி.பி கலை அறிவியல் கல்லூரியின் அரபிப் பேராசிரியருமாகிய ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி அவர்களால் முதன்முதலாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி தஞ்சை-வழுத்தூரிலுள்ள முஹ்யித்தீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ வுக்கு முன் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சமுதாய ஆர்வலர் M.J அப்துல் ரவூப் அவர்கள் நூலை வெளியிட மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் ஹாஜி A.பஷீர் அஹ்மது அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.


மேலும் மேற்கண்ட பள்ளிவாசல் செயலாளர் தாஜூத்தீன் ,என்ஜினியர் தாஜூத்தீன், M.J.பஷீர் அஹ்மது ஆகியோரும் இந்நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறே வழுத்தூர் தர்காப் பள்ளியில் - லைலத்துர் கத்ர் இரவில் - நடைபெற்ற வித்ரிய்யா வெளியீட்டு நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மவ்லவி ஹாபிஸ் காரி ஷாஹூல் ஹமீது பாகவி அவர்கள் நூலை வெளியிட தர்காப் பள்ளி முத்தவல்லி ஹாஜி பஹாவுத்தீன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.



 ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி அவர்கள் நூலை வெளியிட என்ஜினியர் தாஜூத்தீன் பெற்றுக் கொண்ட போது எடுத்த படம்..

Post a Comment

0 Comments