தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை


தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும் சேமித்து வைக்கவும், விநியோகிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா தெரிவித்தார்.தமிழக சட்டசபையில்  கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110–ன்கீழ் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை படித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலைப்பொருள்
புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954–ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள், குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கூறி, 2.8.2004–அன்று அறிவிக்கையை ரத்து செய்தது.தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006–ல் மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தன.தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென ‘தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்’ என்ற தனித் துறையை ஏற்படுத்தியுள்ளது.உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின்கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக் கூடாது என்றும் புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது.

குட்கா, பான்மசாலாவுக்கு தடை
 உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்கும் வண்ணமும், அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அளிக்கும் வண்ணமும், என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஒர் ஆரோக்யமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Post a Comment

0 Comments