இந்திய முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத் தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 66-வது நிறுவன தினம் மார்ச் 10

1906 டிசம்பர் 31-ல் உருவாக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக், இந்திய விடுதலைக்குப் பின் 1948 மார்ச் 10-ல் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மலர்ந்தது. சோதனை மிகுந்த கால கட்டத்தில், அல்லாஹ்வை முன்னிறுத்தி தாய்ச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்கள் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப்.

பாடுபட்டு பெற்ற உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டு விட்ட சூழ்நிலை ஒருபுறமிருக்க -

`தொப்பி’யுடனும், `தாடி’யுடனும், `பர்தா’வுடனும் இந்திய முஸ்லிம்கள் நடமாட முடியுமா? என்ற கேள்வி எழுந்த போது, ``முஸ்லிம்களே அச்சப்படாதீர்கள், அதைரியப்படாதீர்கள், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்; அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான்’ என உரத்து குரலெழுப்பி தைரியமளித்தார்கள்.

அரசியல் நிர்ணய சபையில் - நாடாளுமன்ற மக்களவையில், மாநிலங்களவையில், சட்டமன்றங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களும், தொடர்ந்து செய்த தியாகங்களும்தான் இந்திய முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத் தந்தன.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதற்கு பதிலாக பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டபோதெல்லாம் அதை தகர்ந்தெறிந்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

சிறப்புத் திருமண சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு - கட்டாய குடும்ப கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாப்பு- பள்ளிவாசல், தர்கா, மத்ரஸா உள்ளிட்ட வக்ஃபு சொத்துக்களை விற்று வட்டிக்கு முதலீடு செய்யும் சட்டத்திலிருந்து காப்பாற்றப் பட்டது - பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் பாங்கு சொல்ல தடை அமல்படுத்தப்படாமை என்பவையெல்லாம் முஸ்லிம் லீக் சாதனை களின் சில துளிகள். வாழும் காலத்தில் மட்டுமல்ல; மரணித்த பின்னரும் நாம் முஸ்லிமாக அடக்கம் செய்யப்பட வழி ஏற்படுத்தி தந்தது முஸ்லிம் லீக். ஆம்! இறந்தவர் உடலையெல்லாம் எரியூட்டி சாம்பலாக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தபோது அதை தகர்த்தவர்கள் முஸ்லிம் லீகர்கள்.

கபரஸ்தான்கள் நகர எல்லைக்குள் இருக்கக் கூடாதென மசோதா முன் மொழியப்பட்ட போது, அதை உறுதியாக எதிர்த்து தடுத்தவர்கள் முஸ்லிம் லீக் தலைவர்கள்.

உர்தூ மொழி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி உர்தூவுக்கு தேசிய மொழி அந்தஸ்தும், உரிய கவுரவமும் பெற்றுத் தந்த பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

மத்ரஸாக்களின் தனித்தன்மையை காப்பாற்றியதோடு எண்ணற்ற கல்வி நிலையங்கள் உருவாக்கியவர்கள் - உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம் லீகர்கள்.

கல்லூரிகளில் கால் வைக்காதவர்கள்கூட கைநிறைய சம்பளம் பெறும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புபெற அரபு நாடுகளின் கதவை திறக்கச் செய்தவர்கள் முஸ்லிம் லீக் தலைவர்கள்.

அந்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்குத் தான் மார்ச் 10 அன்று 66 ஆவது நிறுவன தினம்.

தேசிய ஒருமைப்பாடு - சமய நல்லிணக்கம் - சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காத்தல் என்பதை லட்சியமாகக்கொண்டு செயல்படும் இந்த பேரியக்கம்

மஹல்லா ஜமாஅத் வலிமையை பறைசாற்றுகிறது

பள்ளிவாசல் தப்தர் திருமண பதிவேட்டை பாதுகாக்கச் சொல்கிறது.

மார்க்க விஷயங்களில் உலமா பெருமக்களின் தீர்ப்பே இறுதியானது என உறுதியாகக் சொல்கிறது.

சமுதாய ஒற்றுமையை வலியுறுத்துகிறது

தீவிரவாதத்தை அடியோடு வெறுக்கிறது

சமய நல்லிணக்கம் மலர பாடுபடுகிறது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருமை பேசும் மீலாது விழாக்களை நடத்தி அதில் பிற சமய அறிஞர்களையும் பங்கேற்கச்சொல்கிறது. கேரள மாநிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அரபி மொழிக்கு உரிய மரியாதை - உலமா பெருமக்களுக்கு ஊதியம் என வாய்ப்பேற்படுத்தி தந்தது முஸ்லிம் லீக்.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று, குறைந்த பட்ச செயல் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட சாதனைகளே நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழு, நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைகள்.

கல்வி -வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு-

முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகள் - பள்ளிக்கூடங்கள், வங்கிகள் -

முஸ்லிம் மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை-

முஸ்லிம் பெண்களுக்கு இரண்டு மடங்கு இணை மானியம்-

மத்ரஸா நவீன கல்வி மேம்பாட்டிற்கு பல நூறு கோடி மானியம் -

இப்படி எண்ணற்ற உரிமைகளை ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டமின்றி பெற்றுத் தந்த பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இதற்காக அது விளம்பர ஆதாயத்தை பெற்றதில்லை அடக்கமும், அமைதியுமே இதன் தாரக மந்திரங்கள்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவதே இதன் நோக்கம்.

இந்த வரலாறு தொடரும்.....

``ஆயிரம் ஆண்டுகள் முயற்சிசெய்தாலும் முஸ்லிம் லீக் போன்ற ஒரு இயக்கத்தை யாராலும் உருவாக்க முடியாது’’ என்று முழங்கிய காயிதெ மில்லத்,

``முஸ்லிம்களின் வரலாற்றை தொடர விரும்பினால் முஸ்லிம் லீகை வளர்ப்பது ஒன்றுதான் வழி; அது இன்றியமையாத ஒன்று. புதிது புதிதாக கட்சிகளை ஆரம்பித்து எதையும் சாதிக்க இயலாது.

வரலாற்றுப் பெருமை மிக்க இந்த கட்சியை தொடர்வதின் மூலமாக நாம் நன்மைகளைப் பெற முடியும். நம்முடைய வரலாறு பெருமைக்குரியது; எண்ணி எண்ணி மகிழத்தக்கது; அந்த வரலாற்றின் தொடர்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பற்றிப் பிடித்துக் கொள்வதில்தான் இருக்கிறது’’ என்றும் அழுந்தந்திருத்தமாக குறிப்பிட்டார் கள்.

அந்த கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களின் வழிகாட்டுதலில், மாண்புமிகு இ. அஹமது சாஹிப், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் தலைமையில் பணி தொடர்வோம். சமுதாய மானம் காப்போம்! - காயல் மகபூப்

Post a Comment

0 Comments