பஸ் படிக்கட்டில் 2 முறைக்கு மேல் பயணித்தால் மாணவரை நீக்க வேண்டும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

பஸ் படிக்கட்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யும் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை பெருங்குடி அருகே கடந்த திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது.
இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அ. கருணா சாகர் அளித்த அறிக்கையினை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் மீது வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் பஸ்களில் இருந்து இறக்கி விடப்பட்டு, அடுத்து வரும் வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தடுப்பது, முன்னால் செல்லும் வாகனங்களை முந்தும் வகையிலும், அதிவேகமாகவும் பஸ்களை இயக்குவதைத் தவிர்ப்பது ஆகியவை குறித்து அவ்வப்போது மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
படிக்கட்டு பயணங்களின் ஆபத்து மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வி நிலையங்கள் தொடங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் பஸ் நிறுத்தங்கள் மற்றும் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தப்படுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதாது.
தொடர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியின் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், அந்த மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்.
இந்த வழக்கு மீண்டும் ஜனவரி 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். போலீஸார் அறிக்கையில் கூறியுள்ள இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், பஸ் படிக்கட்டு பயணங்களைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அடுத்த விசாரணை நாளில் அரசும், காவல் துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments