தியாகத் திருநாள் தலைவர் பேராசிரியர் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள பக்ரீத் பண்டிகை வாழ்த்துச் செய்தியாவது:

பக்ரீத் பண்டிகை- தியாகத் திருநாள் என்ற உலக முஸ்லிம்கள் கொண்டாடும் ஹஜ் பெருநாள், தியாக வாழ்வின் சிறப்பை விளக்குவதாக உள்ளது.

படைத்த படைப்பெல்லாம் மனுவுக்காக;

மனுவைப் படைத்தான் தனை வணங்க என்பது தமிழ் மக்களின் முதுமொழி.

மனிதனைப் படைத்த மகேசனை உடல், பொருள், உயிரால் வணங்குவதை இறையன்பர்கள் கடமையாகக் கருதி வாழ்கிறார்கள்.

அன்பர் நிலைக்கு என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே

என தாயுமான அடிகளின் பாடல் இறையன்பர்களின் வாழ்வின் பெருமையை உணர்த்துகிறது.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்-அம்) அவர்களின் மூதாதையான நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இறையன்புக்குரிய இலக்கணத்தைப் பார்க்கலாம்.

நிச்சயமாக எனது தொழுகையும், எனது தியாகமும்,

எனது வாழ்வும், எனது மரணமும் அகிலங்களின் அதிபனாகிய அல்லாஹ்வுக்கே ஆகும்

என்று வாழ்ந்து காட்டியவர் அவர். அவருடைய வாழ்வு முழுவதும், அவரின் துணைவியர், அவரின் மகன்கள் ஆகியோரின் வாழ்வும் இறைவனுக்காகச் செய்யப்படும் தியாகத்தின் உச்சநிலையை வருணித்துக் காட்டும் வரலாறாகும்.

இத்தகைய மெத்தகு வாழ்வை, உலக முஸ்லிம்கள் மட்டுமின்றி, மானிட சமுதாயமும் நுணுகிப் பார்த்து அதிலுள்ள படிப்பினையைப் போற்ற வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் இஸ்லாம் இந்தப் பெருநாளை விதித்திருக்கிறது.

திருக்குர்ஆன் போதனைகளையும், திருநபியவர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றும் முஸ்லிம் உலகம், தியாகத்தின் பெருமையை உணர்ந்து, அதனை உலக மாந்தருக்கு உணர்த்திடக் கடமைப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு சிலருடைய தீவிரப் போக்குகளால், முஸ்லிம் உலகம் முழுவதுமே விமர்சனத்துக்கு ஆளாக்கப்படும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

தனது சொல்லால், தனது செயலால், பிறருக்குத் தீங்கு செய்யாதவனே முஸ்லிம் என்னும் நபி மொழியை மறப்பது ஏனோ?

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்னும் திருநெறி வேரூன்றி இருக்கிறது. இதுவே, மானிட நேயம் போற்றும் நன்னெறியாகும். அன்பாலும், நேசத்தாலும், ஆதரிப்பாலும், அரவணைப்பாலும், சகோதரத்துவ வாஞ்சையாலும், சன்மார்க்கச் சிந்தனையாலும், நன்மார்க்கத்தை நானிலம் முழுவதிலும் பரப்பும் பணியே நற்பணியாகும். 

இப்பணியில் எல்லோரும் இணைவோம்! இதயங்களை இணைப்போம்! இனியதொரு புத்துலகம் சமைப்போம்! எல்லோருக்கும் ஈது பெருநாள் வாழ்த்துக்கள்.

-பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநிலத் தலைவர், இ.யூ.முஸ்லிம் லிக்

Post a Comment

1 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........