பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடை: மாணவர்களுக்கு எச்சரிச்கை


வகுப்பறைக்குள்ளும், பள்ளி வளாகத்திலும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செல்போன்களை வாங்கிக்கொடுக்கக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டு செல்வதும், வகுப்பறையில் பேசுவதும், பள்ளிக்குப்போகும் போதும் வீட்டுக்கு வரும்போதும் அதே கவனத்தில் இருப்பதும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இனி பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடைவிதிக்கும் சுற்றரிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் மகனுக்கோ மகளுக்கோ செல்போன் வாங்கிக் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தாலும் அதை பள்ளிக்கு கொண்டு செல்ல பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தும் வகையில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ப.மணி, ஏற்கனவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இப்போது அதை மீண்டும் நினைவுபடுத்த உள்ளோம். செல்போனை எந்த காரணம் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசின் இந்த உத்தரவினை அடுத்து இனிமேல் எந்த ஒரு பள்ளிக்கூட மாணவரோ அல்லது மாணவியோ பள்ளிக்கு செல்போன்கொண்டு சென்றால் மாணவர்களின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனை போடுவார்கள். செல்போன் இருப்பது கண்டுபிடித்தால் அந்த மாணவர்கள் எச்சரிக்கப்படுவார்கள். அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும்போது பெற்றோருடன் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments