கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் கோரிக்கை.
***************************
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது....
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) பராமரிப்பில் (NH45C, தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலை) தஞ்சாவூர்-கும்பகோணம் சாலை எனது பாபநாசம் தொகுதி வழியாகவும் அமைந்துள்ளது. இந்த சாலையானது நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு செல்வோர் பயன்படுத்தும் வழியாகவும், உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் நகருக்கு வரும் ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பாதையாகவும் இது அமைந்துள்ளது.
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையான இந்த சாலை வழியாகத்தான் பாபநாசம், திருப்பாலத்துறை, வாங்காரம்பேட்டை,ராஜகிரி, பண்டாரவடை, வழுத்தூர், சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதிகோவில் ஆகிய பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்துவருகின்றனர்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை என்ற நிலைக்கு சிறிதும் தகுதி இல்லாத நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதிக அளவில் வளைவுகளும், குறுகலான சாலையாகவும் இருப்பதால் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது சாலையின் மட்டத்தில் இருந்து கீழே இறங்கி செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
தஞ்சாவூர்-சோழபுரம் இடையே நடைபெறும் புதிய புறவழிச் சாலை போடும் பணிகளுக்காக செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் மிகவும் வேகமாக செல்கின்றன, தனியார் பேருந்துகளும் இந்த குறுகிய சாலைகளில் வேகமாக செல்வதால் அடிக்கடி சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்கள் நடைபெறுகின்றது.
குண்டும் குழியுமான இந்த சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் நீர்தேக்கத்தால் பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். இந்த பாதிப்புகள் குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு முறைப்படி தகவல்கள் தெரிவித்தும், இதுவரை முறையான நடவடிக்கைகளை அந்த ஆணையம் மேற்கொள்ளவில்லை.
எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது குறித்து விசாரித்து போர்கால அடிப்படையில் இந்த சாலையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments