டெல்லியில் ஊரடங்கு வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இத்தனை நாட்கள் லாக்டவுன் விதித்து அதனால் கிடைத்த பலன்களை கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இழக்க முடியாது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவி்த்தார்.
டெல்லியில் லாக்டவுன் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதற்கான உத்தரவை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்டது. இதன்படி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையி்ல டெல்லியில் லாக்டவுன் 24-ம் தேதி காலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் அதுவரையில் மெட்ரோ ரயில்கள் ஓடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு இருந்த லாக்டவுன் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோ அதே நடைமுறை தொடரும். அத்தியாவசியப் பணிகள், அத்தியாவசியப் பணியில் உள்ள ஊழியர்கள், மருத்துவம், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல் பங்க், ஏடிஎம்உள்ளிட்டவை தொடர்ந்து இயங்கும்.
கடந்த மாதம் 19ம் தேதியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி 28ஆயிரமாக இருந்த கரோனா தொற்று, டெல்லியில் நடைமுறைப் படுத்தப்பட்ட லாக்டவுன் தினசரி தொற்று 6,500ஆகக் குறைந்துள்ளது, பாஸிட்டிவ் சதவீதம் 10 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இதையடுத்து, கரோனா தொற்றை தொடர்ந்து குறைக்கும் வகையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜிடிபி மருத்துவமனைக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேரில் சென்று இன்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது, தொற்றிலிருந்து குணமடைந்துவருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் கிடைத்த பலன்களை எல்லாம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இழக்க விரும்பவில்லை. ஆதலால், லாக்டவுன்24ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
கடந்த வாரங்களில் லாக்டவுன் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் நீடித்ததோ அது தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை. கரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் 6,500ஆகக் குறைந்துள்ளது, 10 சதவீதமாக பாசிட்டிவ் சரிந்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்தில் இன்னும் கூடுதலாக மக்கள் கரோனாவிலிருந்து குணமடைவார்கள் என நம்புகிறேன். நாட்டில் இரு நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளன, வேறு தடுப்பூசிகளும் வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை எந்தப் பதிலும்இல்லை.
கரோனாவிலிருந்து குணமடைந்தோரைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றைச் சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கின்றன”
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........